Sunday, April 17, 2011

இடப்பெயர்ச்சி




நவகிரகங்களை போல்
நானும் இட்ம் பெயர்ந்தேன்

நகரின்
மையத்திலிருந்து கோடிக்கு!!!

அவ்வளவுதான் தலைகீழானது வீடு

அழகிய ஆடைகளால்
அலங்கரிக்கப்பட்ட அத்துணை
அடுக்குகளும் அகற்றப்பட்டு
அம்மணமாக்கப் பட்டது
அலமாரி!!!

தூசிகளால் படையெடுக்கபட்டு
புழுதிகளால் புடைசூழப்பட்ட பல
புத்தகங்களின் மீது விரல்கள்
பட்ட்து இன்று!!!

ஒவ்வோரு நாளும் நல்ல நேரம் பார்த்த
சுவர் கடிகாரத்தின் முதுகில் அவ்வளவு
அழுக்கு!!!

பதவியிறக்கம் செய்யப்பட்டன
தன் இறக்கைகளில் கசடை சேகரித்து
வியர்வையை விரட்டிய
மின்விசிறிகள்!!!

செவிடாக்கப்பட்டு பின் குருடாக்கப்பட்டு
அட்டைப்பெட்டிக்குள் அடைக்கலமானது
தொலைக்காட்சிப் பெட்டி!!!

மறைவிடம் நோக்கி
படையெடுத்தன கரப்பான்கள்
குடும்பத்தோடு!!!

வெகு நாள் தாடிக்காரன்
சவரம் செய்து வந்த்து போல்
காட்சியளித்த்து வீட்டு சுவர்கள்!!!

அம்மா வாங்கி வந்த
சமயபுரத்து மாரியம்மனும்
நண்பன் ஜானி வாங்கி வந்த
வேளாங்கண்ணி மாதாவும்
கைகோர்த்து காட்சியளித்தனர்
ஒரே பையில்!!

அம்மிக்கல் முதல் வைரக்கல் வரை
அத்துணையும் அடுக்கி வைத்து
வெறும் வீட்டை பார்வையிட்ட போது தான்
தெரிந்த்து
அங்கங்கே விட்டுவிட்டு வந்த
ஞாபகங்களை!!!





கசக்கும் நிஜம்

பனி
படர்ந்து கொண்டிருக்கின்றது
வெளியில்!!!

கொலம்பஸ் கண்ட நாடு
அயலான் தேசம்
வேற்று நேரம்
மாற்று தட்பவெப்பம்

இரும்பை இறகாக்கும் 
துரும்பை தூசியாக்கும் 
உடம்பை உருக்கும்
உறைபனி!!

பனியை பழக்க 
பதம் பத்தவில்லை இந்த
வெய்யிலில் வெளுத்த உடலுக்கு!!!

என்னை மகனாகப் பெற்றவர்களையும்
என்னை மகானாக மாற்றியவளையும்
என்னை தகப்பனாய்க்க வாய்த்தவனையும்
தவிக்க விட்டு விட்டு

பணியின் பயனால்
பனியின் பரவலில் 
படர்ந்து கொண்டுள்ளேன்
மெள்ள!!!

காதலோடு என்னவள் 
உரித்த வெங்காய மணத்தில்
ஆசையோடு அண்ணி
உரித்த பூண்டின் குணத்தில்
அன்போடு அம்மா
தனக்கே உரித்தான கைப்பக்குவத்தில்
பாசத்தையும் நேசத்தையும்
 கலந்து செய்த வத்தக்குழம்பை

குளிருட்ட்ப்பட்டு, பதப்படுத்தப்பட்டு
இதப்படுத்தப்பட்டு பின் 
சூடாக்கப்பட்டு

ஓவனில் பொங்கிய சோறோடு
சாப்பிட்ட போது 
வழிகின்ற கண்ணிரில் 
நனைந்தன என் நினைவுகள்!!!

குழம்பு ருசித்தாலும்
நிஜம் கசக்கிறது இங்கெ!!!

பனி 
படர்ந்து கொண்டிருக்கின்றது
வெளியில்  
இன்னும்!!!




Saturday, October 30, 2010

மாற்றம்

அதிகாலையில் அகன்று விடுகின்றது
உறக்கம் இப்போதெல்லாம்!!!

கதறக் கதற
கற்பிழக்கப்படுகிறது செய்தித்தாள்
காலை நேரங்களில் ஒரு வரி விடாமல்!!!

சண்டை பிடிக்கிறது வயிறு
சரியான நேரத்தில் சாப்பிடவில்லை எனில்!!!

தொலைக்காட்சியில் செய்திகள் மட்டுமெ ஈர்க்கின்றது
திரைப்படங்களும், பாடல்களும்
வேண்டாத விருப்பங்களாயின!!!

எங்கு போனாலும் பத்து நிமிடம் முன்பாக போக துடிக்கின்ற உணர்வு
எப்படி ஒட்டிக்கொண்ட்து என தெரியவில்லை!!!

மாலைநேர மசால் வடைகளும், மிளகாய் பஜ்ஜிக்களும்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!!!

நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை
முன்பதிவில்லாதா பயணங்களை
படிக்கட்டில் பயணித்த தொலைதூர பயணங்கள்
இப்போது நினைவில் வந்தாலும்
பதற வைக்கின்றன!!!

பயண நேரத்தை விட அதிக நேரம்
முன்பதிவு வரிசையில் செலவிட
பக்குவமாகிவிட்ட்து மனது!!!

முன்பெல்லாம் பெரியவர்களுக்கே விட்டுக் கொடுத்த
ஜன்னலோரப் பயணங்களை இப்பொதெல்லாம்
குழந்தைகள் கேட்டாலும் கொடுக்கத் தோன்ற வில்லை!!!

கடன் கேட்பவர் நண்பணாயினும் “திருப்பி கொடுப்பானா” என
யோசிக்க வைக்கின்றது ஒரு நிமிடம்!!!

தலையில் தோன்றிய வெள்ளை முடிகளை பார்த்தால் வரும் பயம்
இப்போது தாடி மீசையில் வரும்
பார்த்தால் வருகிறது!!!

ஒவ்வொரு செலவையும் கணக்கு வைத்துக் கொள்ளும்
பழக்கம் எப்படி வந்த்து என தெரியவில்லை!!!

நானும் வந்து விட்டேன் என நினைக்கிறேன்
நடுத்தர வயதிற்குள்!!!

Thursday, April 8, 2010

ஒரு மிஸ்ஸுடு கால்

காவி சீருடைக்காக
காத்திருக்கும் கண்கள்
பகல் பதினொரு மணிக்கு!!!

இரண்டாம் காப்பி
இரண்டு வாய் உள்ளே போயிருக்க
கணீரென்று காற்றை
கடைந்தெடுத்து வரும்
“தபால் ஆச்சி” எனும் குரல்!!!

காப்பி நிறமும்,
காவி நிறமும் கலந்த சீருடை,
மூக்கு கண்ணாடியில் சிறையிடப்பட்ட கண்கள்,
வியர்வையின் கோலங்களில் அலங்கரிக்கப்பட்ட சட்டை,
ஊரின் தகவல்களை ஓளித்து வைத்திருக்கும்
ஜோல்னா பை!!!

தண்ணீருக்காக
தவித்து போயிருக்கும் வாய்,
ஓரு குவளை மண் பானை நீரை
ஒரெ மடக்கில் குடிக்கும் தாகம்!!!

வீட்டு முற்றத்தில் அமர்ந்து
தபால் கட்டுகளை கையாள்வதில்
வெளிப்படும் லாவகம்!!!

கொடுத்த காப்பியை
ஆறிப் போகும் முன்
ஆற்றிக் குடிக்கும் போது
தெரியும் ஆனந்தம்!!!

இருந்த களைப்பை
இளைப்பாறி விட்டு
வரும் களைப்பை எதிர்கொள்ள
வில்லிருந்து புறப்படும் அம்பை போல்
புதுத் தெம்புடன்
புறப்படுவார் அடுத்த தெருவிற்கு!!!

யாரனுப்பியது,
என்ன விஷயம்
என்ற ஆர்வத்துடன் தபாலை
பிரிக்கும் கரங்கள்!!!

ஊருக்கு போன
மகனின் மடல்
என அறிந்தவுடன்
அதிகரிக்கும் ஆர்வம்!!!

“அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு” என ஆரம்பித்து
அத்துணை ஆத்மாக்களையும் நலம் விசாரித்து,
“ஓடு மாற்ற கொத்தனார் வந்தாரா” என வினவி,
“லெக்‌ஷ்மி கன்று போட்ட்தா” என கவலைப்பட்டு,
“ராஜம் பாட்டிக்கு முழங்கால் வலி தேவலாமா” என விசாரித்து விட்டு,
” நல்ல படியாக வந்து சேர்ந்தேன்” என முடியும்
மடல்!!!

ஆனால்,
காலம் முன்னேறி விட்ட்தால்,
தொடர்புகள் தொடர்ந்து விட்ட்தால்,
அத்துணை விசயங்களும்,
இத்துணை விசாரிப்புகளும்
அடங்கி விடுகின்றன

இன்று
அதிகாலையில் வரும்
ஒரு ”மிஸ்ஸுடு காலில்”!!!